Search
Close this search box.
உணவு வழங்கும் திட்டம் – பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு..

பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதா என்பது பற்றியும், உணவுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மற்றும் 100 பேருக்குக் குறைவான பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை கையளிக்குமாறு அவர் குறிப்பிட்டார்.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்ற குழு அறையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஊடாக நன்மை பெறும் மாணவர்களின் தொகை 2024ஆம் ஆண்டு 11 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக வழி வகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. இதற்கமைய ஒரு மாணவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 80 ரூபாவிலிருந்து 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவின் தரம் தொடர்பில் அளவுகோல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மாகாணக் கல்வித் திணைக்களம், பிராந்தியக் கல்விப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குழுவில் தெரியவந்தது.

கடந்த காலத்தில் 6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு வருகை தருவதாக அறிக்கையிடப்பட்டதாகவும், இந்த உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்காக வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும், 4 பில்லியன் ரூபாவுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் பங்கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விருப்பத்துடன் உதவிகளை வழங்கினாலும், இந்த உதவிகளை நேரடியாக அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இல்லை எனவும் தலைவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களுக்கு இவ்வாறான உதவிகளை நேரடியாக வழங்குவதில் ஏதாவது சட்டரீதியான தடைகள் உள்ளனவா என்பது பற்றி ஆராயுமாறும் அவர் அறிவுறுத்தினார். மேலும், சமூக ஊடகங்களின் அடிப்படையில் புகார்களைப் பெறுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்குமாறு சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பில் புகராளிப்பதற்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார். அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில், மிகவும் வறுமையான மற்றும் வறுமையான பிரிவுகளின் கீழ் முறையே 313,947 குடும்பங்களும், 653,047 குடும்பங்களும் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவின் தலைவருக்குப் பதில் வழங்கினர்.

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ளபோதிலும் அவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் இங்கு தெரியவந்தது. மேலும், மேன்முறையிடுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் குழு கேட்டறிந்துகொண்டது. இந்த வருடத்தின் மே மாதத்தில் ஒவ்வொரு பிரிவின் கீழும் அஸ்வெசும நலன்புரி வழங்கிய முதல், நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, கையளிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளில் தெரிவுசெய்யப்படவுள்ள பயனாளர்களின் எண்ணிக்கை போன்ற சரியான தகவல்கள் மற்றும் ஜூலை 2024 முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதால் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அளவுகோல்கள் குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

அத்துடன், கிராம சேவகர் பிரிவில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எந்த அதிகாரிகளைச் சார்ந்தது என்பது தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும், இது தொடர்பான அறிக்கையொன்றையும், பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை வழங்கி அஸ்வெசும பயனாளிகளாகியிருப்பது புலனாகியிருப்பதால் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தகவல்களை வழங்கியவர்களின் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையயும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

விதாதா நிலையங்கள் மற்றும் வணிக வங்கிகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காக கடன் திட்டத்துடன் இதனையும் ஒன்றிணைக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளன என்பது குறித்தும் குழுவின் தலைவர் வினவினார். உத்தேச குடும்ப அமுலாக்கத் திட்டம் குறித்த கால அட்டவணையுடன் தகவல்கள் அடங்கிய அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் வலியுறுத்தினார். முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்தொகைக்கான செலவு குறித்த விரிவான அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவிடம் வழங்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.எம்.முஷாரப், சஞ்சீவ எதிரிமான்ன, உதயன கிரிந்திகொட மற்றும் சுதத் மஞ்சுள ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Sharing is caring

More News