மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் பல வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்டிருந்த பொதிகளில் ஏராளமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பல பொதிகளில் இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 150 போதை மாத்திரைகள், 466 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கொக்கெய்ன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 9 மில்லியன் ரூபா என சுங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் கனடா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தெஹிவளை, வெள்ளவத்தை, வெயாங்கொடை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
எனினும், இந்த முகவரிகள் போலியானவை என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கை சுங்கப் பிரிவினரின் விசாரணையின் முடிவில் போதைப்பொருள் அடங்கிய பொதிகளை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.