குளியாப்பிட்டியில் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் 18 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில், கொலை செய்யப்பட்ட இளைஞனின் காதலி மற்றும் குளியாப்பிட்டிய, இலுகென, வஸ்ஸாவுல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, குற்றத்திற்கு உதவியமை, ஒரு நபரைக் கொலை செய்தமை மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குளியாப்பிட்டி பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட 31 வயதான குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் நபர், கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி காணாமல் போயிருந்ததாகவும், 16 நாட்களுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 07 ஆம் திகதி மாதம்பே காட்டுப்பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் இளைஞனின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
உணவகத்தை நடத்தி வந்த பாதிக்கப்பட்ட நபர், குளியாப்பிட்டியவில் உள்ள தனது காதலியின் இல்லத்திற்கு தனது ஊழியருடன் சென்றிருந்த நிலையில், அவர் காணாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.