மீண்டும் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்? தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு..!
நாட்டில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்க திணைக்களத்தின் விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் சுங்க திணைக்களத்தை சேர்ந்த பணியாளர்களால் சுகவீன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமையால் துறைமுகங்களில் தேங்கிக்கிடந்த பொருட்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 13 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் (11) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து; 30ற்கும் மேற்பட்டோர் காயம் .
நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது, விபத்தில் சிக்கி 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மட்டக்களப்பில் தோண்டப்பட்ட ஆயுதக்கிடக்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் இன்று விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20ஆயிரம் ரி56 ரக துப்பாக்கி ரவைகளும் 300 கண்ணி வெடிகளும், 38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடைப்படையின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜயசுந்தர அவர்களின் கீழான அம்பாறை கட்டளைத்தளபதி உதவி கட்டளை அதிகாரி பீ.குணசிரி அவர்களின் தலைமையின் கீழானதுமான மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டடிபிள்யு ஏ.ஏ.பி.சம்பத் குமார அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் குறித்த அகழ்வுப்பணி இன்று இடம்பெற்றது. வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி. லக்மல் குமார, கல்லடி , களுவாஞ்சிகுடி, வவுணதீவு அகிய பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வுப்பணியினை இன்று மேற்கொண்டனர். இதன் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன், வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிசார் பொறுப் பேற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.