குற்றப் புலனாய்வு பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர்..! குற்றம் சுமத்தும் பிரபல மாடல் பியுமி..
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர் என பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலிகுற்றம் சுமத்தியுள்ளார். தமது உள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் பியுமி பதிவொன்றை இட்டதன் மூலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போதைப் பொருள் குற்றச் செயல் சம்பவமொன்றில் தொடர்புபடுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். மோட்டார் வாகனத்தை விற்பனை செய்து ஓராண்டு காலம் கடந்துள்ளதாகவும், இந்த வாகனத்தை வைத்திருந்த நபர் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரின் மனைவி தனது பழைய நண்பி எனவும் இதனால் தவணை அடிப்படையில் வாகனத்திற்கு பணம் பெற்றுக்கொள்ள இணங்கியதாகவும் கூறியுள்ளார். 50 இலட்சம் ரூபா பணம் வழங்கியதாகவும் இன்னமும் 50 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும், கொடுக்க வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதாகவும் இதனால் வாகனம் இன்னமும் தமது பெயரிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வாகனமொன்றை விற்பனை செய்யும் போது அவர்களின் ஜாதகத்தை பார்த்து விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம் – வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக குவியும் மக்கள்..
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது. அத்துடன், கடையடைப்பு கண்டன போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய முயற்சிப்பதாக நேற்றிரவு வெளியான தகவலை அடுத்து, பொதுமக்கள் வைத்தியசாலை வளாகத்தில் கூடிய நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில், அதிகாலை முதல் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஏ 9 வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவ்விடத்தில் பதற்ற நிலை தொடர்வதாக தெரியவருகின்றது.
ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை!
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை என யாழ்ப்பாண பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 5 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இதன்போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் வினவப்பட்டது. ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்திக்குழுவினரால் கேட்கப்பட்டது. இதற்கு தமிழ் பேசும் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் எவ்வித பொறுப்புமின்றி எமக்கு அவர்களைத் தெரியும் ஆனால் கைது செய்ய முடியவில்லை என பொறுப்பற்ற விதத்தில் சாதாரணமாக பதில் கூறினார். இப்பதிலினால் கோபமடைந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், பொலிஸார் எவ்வாறு இப்படி பொறுப்பற்ற விதத்தில் பதில் கூற முடியும் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாது அவர்கள் இங்கேதான் இருக்க வேண்டும் அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை உங்களுக்கு கீழே தான் சைபர் கிரைம் இயங்குகிறது. அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும், அல்லது குறித்த சந்தேக நபர் வசிக்கும் கிராம செயலாளரிடம் அவரது விவரங்களை திரட்டி அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும். இவ்வாறு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஏன் பொலிஸாரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை. ‘ஆப்ரேஷன் சக்சஸ் பேசன்ட் டெத்’ என்று கூறுவது போல் உள்ளது உங்களது பதில் என குறிப்பிட்டார். பொலிஸாரின் அசட்டைத் தனமான பதிலைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பொலிஸார் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு நாங்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அப்படியாயின் பொலிஸ் திணைக்களம் ஏன்? இயங்குகிறது. வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது. சம்பவம் இடம்பெற்று இவ்வளவு நாள்கள் தாண்டியும் ஏன் எவரையும் கைது செய்யவில்லை. ஆட்களைத் தெரியும் கைது செய்ய முடியாது என்று கூறுவது பொலிஸ் தரப்பிலே சந்தேகம் ஏற்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.
ரயில் பாதையில் பேசிக்கொண்டு சென்ற மாணவன் மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அம்பலாங்கொடை ரயில் பாதையில் பேசிக்கொண்டு சென்ற பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் ரயிலில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர்கள் 17 வயதுடையவர்கள் என்பதுடன், இருவரும் வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்பவர்களாவர். குறித்த மாணவன் அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், மாணவி அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. ரயில் மோதியதில் மாணவன் பலத்த காயம் அடைந்ததாகவும், மாணவிக்குக் கீறல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ரயிலில் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் சுயநினைவின்றி இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
உயர் தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! கல்வி அமைச்சு அறிவிப்பு
2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லா கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 08 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு ஏழு மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 மாணவர்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அழகுசாதனப் பொருட்களால் துரதிஷ்டமான நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும்!
அழகுசாதனப்பொருட்கள் தொடர்பில் முறையான கட்டுப்பாடுகள் இன்மையால் எதிர்காலத்தில் துரதிஷ்டமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வயது, பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல், சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்ய பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். எனவே தரமற்ற அழகுசாதனப்பொருட்கள் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் அழகிற்காக பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்களில் அதிக செறிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அண்மையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மாமியாரை மூர்க்கத்தனமாக வெட்டி படுகொலை செய்த மருமகள்.. குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து கொடூரம்.
கம்பளை – ஹெட்காலை பகுதியில் வயோதிப மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தனது குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, உலப்பனை தோட்டத்தில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான ஜோதி என்ற 78 வயதுடைய வயோதிப பெண்ணே மருமகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரான குறித்த பெண், திருமணம் முடித்து உலப்பனை தோட்டத்தில் வயோதிப மாமியார் மற்றும் தனது 7, 4 வயது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் (06) நள்ளிரவு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மூர்க்கத்தனமாக வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய வயோதிபப் பெண்ணை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து, இரவு 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது சந்தேக நபரான பெண் வீட்டினை மூடிக்கொண்டு தனது குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி பொலிஸாரை நெருங்க விடாமல் தடுத்துள்ளார். இந் நிலையில், பொலிஸார் சந்தேக நபரான பெண்ணின் கணவருடன் தொடர்புகொண்டு பெண்ணை நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர். மேற்படி, கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் காந்திலதா மேற்கொண்டுள்ளதுடன் ஹெட்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இன்றும் நாளையும் முடங்கப்போகும் அரச சேவை!
அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளையும் (09) சுகயீன விடுமுறையில் சென்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அஞ்சல், நில அளவையாளர், விவசாய ஒழுங்குமுறை, கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண பொது முகாமைத்துவ சங்கத்தின் தலைவர் என்.எம்.விஜேரத்ன தெரிவித்தார். இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக அஞ்சல் ஊழியர்களும் நேற்று (07) மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். அத்துடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று பணிக்கு சமூகமளித்துள்ள போதிலும், நாளை சுகயீன விடுமுறையை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இதேவேளை, சுகாதார துறையுடன் தொடர்பான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் தாதியர் சங்கம், இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ளன. அதன்படி, சுகாதார துறை பணிகள் சிக்கல் இன்றி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இன்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் திட்டமிட்டு மேற்கொள்ளவுள்ள பணிப்புறக்கணிப்பினால் அரச சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பான மனு இன்று பரிசீலனை..
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பாக உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த மனு ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு வருகிறது. இந்த மனுவை பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு அண்மையில் பெயரிடப்பட்டது. ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ளவாறு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர், சி.டி.லெனவவினால் கடந்த புதன்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டது. இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சட்டத்தின் முன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இ.தொ.காங்கிரஸ் இன்று முதல் தொழிற்சங்க போராட்டம்..
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று (08) முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், “1700 ரூபாய் வர்த்தமானி வெளியிடும் போது சில தொழிற்சங்கங்கள் நாங்களும் பெற்றுக் கொடுத்தோம் என பெயர் கொடுத்திருக்கிறார்கள். அப்படி பெயர் தான் போட வேண்டும் என்றால் தமக்கு அது பற்றி பிரச்சனை இல்லை எனவும் ஆனால், மக்களுக்கு கட்டாயம் ஒற்றுமையாக, உறுதுணையாக நின்றாக வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். இந்த 1700 ரூபாய் சம்பளத்தை பொறுத்தவரைக்கும், கட்டாயம் பெற்று கொடுப்போம் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால் இதில் இருக்கும் ஒரு விடயம் என்னவென்றால், இன்றைக்கு இளைஞர்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பெருந்தோட்ட சமூகத்தினரை பற்றி அறியாத நபர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் நினைக்கிறார்கள் இன்றைக்கு இந்த 1700 ரூபாய் சம்பளமானது மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வராது என்று. ஆனால், நிறைய பேருக்கு புரியாத விடயம் கொரோனாவுக்கு முன்னால் வறுமையின் விழுக்காற்றானது பெருந்தோட்ட சமூகத்துக்கு மத்தியில் 23% சதவீதமாக இருந்தது, இன்றைக்கு அது 52% சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு குழந்தைகளை படிக்க வைக்கின்றார்கள். சுமார் 1 இலட்சம் மக்கள் இருக்கின்றார்கள் இந்த தோட்ட தொழிலை நம்பி, அந்த ஒரு இலட்சம் மக்களை நம்பி கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இதனை பலமாக எதிர்த்து ஒரு தவறான திரையை முன்னாள் கொண்டு வந்த இருக்கின்றார்கள். அதற்கு நாங்கள் கட்டாயம் பாடம் கற்பித்துகொடுப்போம். நான் மக்களுக்கு, அவர்களின் நம்பிக்கையை தளர விட வேண்டாம் என்று ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் சொன்னதை கட்டாயம் செய்வோம். இன்றைக்கு அரசாங்கமாக இருக்கட்டும், தொழிற்சங்கங்களாக இருக்கட்டும் அனைவருமே முழு முயற்சியுடன் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். மக்களும் இதற்கு ஆதரவு அளிக்கிறார்கள். 1700 ரூபாய் வர்த்தமானி வெளியிடும் போது சில தொழிற்சங்கங்கள் நாங்களும் பெற்றுக் கொடுத்தோம் என பெயர் கொடுத்திருக்கிறார்கள். அப்படி பெயர் தான் போட வேண்டும் என்றால் எனக்கு அது பற்றி பிரச்சனை இல்லை, தயவுசெய்து பெயர் போட்டுக்கலாம். ஆனால், மக்களுக்கு கட்டாயம் ஒற்றுமையாக, உறுதுணையாக நின்றாக வேண்டும். அப்பொழுதுதான் இது சாத்தியமாகும். இதில் வந்து அரசியல் விளையாடுவது ஒரு மிகப்பெரிய தவறு. அதே நேரத்தில், இந்த நீதிமன்ற உத்தரவு வரும்போது சில தொழிற்சங்க தலைவர்களும், அரசியல் தலைவர்களும் சந்தோஷப்பட்டார்கள். இந்த மாதிரி நாங்கள் இருந்தால் நமக்குள்ளே பிரிவினை இருந்தால் இந்த மக்களை முன்னால் கொண்டு போக முடியாது. என்னை பொறுத்த வரைக்கும், நான் இந்த நாள் கூலி சம்பளம் முறைமையை எதிர்க்கின்றேன். ஒரு மாற்று முறைமை தேவை. ஆனால், அந்த மாற்று முறைமை வரும் வரைக்கும் ஒரு நியாயமான சம்பளம், வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சம்பளம் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும் இன்றில் இருந்து மக்கள் அவர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிக்காட்டுவார்கள். அதாவது ஒவ்வொரு தோட்டத்திலும் வெளிக்காட்டுவார்கள். அவர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். நியாயமான தீர்வு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிடப்பட்டுள்ளார்.