Search
Close this search box.

ஏப்ரலில் நாட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

ஏப்ரல் மாதத்தில், நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் கடந்த மாதத்தில் 42 வீதமாக பதிவாகியுள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் புதிய முன்பதிவு, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த கொள்முதல் குறியீடுகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக ஒட்டுமொத்த சுட்டெண் வீழ்ச்சியடைந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டமையே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணம் எனவும், நீண்ட விடுமுறை காரணமாக விநியோகஸ்தர்கள் முன்பதிவை வழங்குவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் முன்னையதை விட ஏப்ரலில் வேகமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைத் துறையில், இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் 56.7 வீத மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. மார்ச் மாதத்தில் கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் மூலம், நிதிச் சேவைகள் துணைத் துறையின் வணிக நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைந்துள்ளதுடன், பண்டிகைக் காலத்தின் தேவைக்கு மத்தியில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக உப பிரிவின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சொத்து விற்பனை ஆகிய துணைத் துறைகளும் ஏப்ரல் மாதத்தில் சாதகமான முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளன. எவ்வாறாயினும், மார்ச்ச மாதத்துடன் ஒப்பிடும் போது  ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததிற்கு அமைய தங்குமிடம் மற்றும் உணவு விநியோக சேவையின் உப பிரிவானது சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஹெலிகொப்டர் விபத்தை அடுத்து ஈரானிய ஜனாதிபதி மாயம்!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அந்த அதிகாரி, மீட்புப் படையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அசர்பைஜான் மற்றும் ஈரானின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் திறப்பு விழாவிற்காக ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள்  சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த ஹெலிகொப்டர் விபத்து  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானிய ஜனாதிபதி  மற்றும்  வெளியுறவு அமைச்சர் Hossein Amirabdollahian உள்ளிட்டோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். “நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை” என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். மோசமான வானிலை மீட்புப் பணிகளை சிக்கலாக்குகிறது என்று மாநில செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. இராணுவத்தின் அனைத்து வளங்களையும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துமாறு ஈரான் இராணுவத்தின் தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் விபத்தில் சிக்கியுள்ள ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்காக அந்நாட்டு மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு!

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும்  (20) மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார். நாளைய வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம செயலாளரால், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“சுரக்ஷா” காப்புறுதித் திட்டம் மீண்டும்!

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது. சுகாதார பிரச்சினைகள் காரணமாக கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வியைத் தொடர வாய்ப்பளித்தல், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலை வரவையும் மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை நோக்கமாக கொண்டு 2017 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 01.12.2022 வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்கான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், நாட்டில் தற்போது பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், “சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்திருந்தார். 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான மனித வளங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அதன்படி, அரசாங்க பாடசாலைகள், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கற்கும் 1- 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 5 – 21 வயது வரையான 45 இலட்சம் மாணவர்களுக்கும், விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான பாடசாலைகளில் பயிலும் 4 – 21 வயது வரையான மாணவர்களுக்கும் மருத்துவ மற்றும் விபத்துக் காப்புறுதி உள்ளிட்ட சலுகைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும். மேலும் குறைந்த வருமானம் பெறுவோர் அதாவது 180,000/= இற்கும் குறைவான வருட வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆயுள் காப்புறுதியின் கீழ் பெற்றோரின் மரணத்திற்கான நிவாரணங்களும் இந்த திட்டத்தின் கீழ் சகல மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. 1. சுகாதாரக் காப்புறுதி அரச,தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு 300,000/= வரையில் வழங்கப்படும். அதன்படி அரச வைத்தியசாலைகளில் தங்கும் ஒரு இரவிற்காக 2500/= வழங்கப்படும். (அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டாலும் பெற்றோர் தொழிலுக்குச் செல்ல முடியாமல் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.) தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு ஒரு இரவுக்கு 7500/= என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. நிவாரணத் தொகை – 20,000/= வரையில் ஏற்கனவே காணப்பட்ட கண் குறைபாடுகளுக்கான கண்ணாடிகள், செவிப்புலன் குறைபாட்டிற்கான செவிப்புலன் கருவிகளுக்கான நிவாரணங்களும் வழங்கப்படவுள்ளன. அத்தோடு பிள்ளைகள் நோய்வாய்ப்படும் வேளையில் வௌி ஆய்வுக் கூடங்களில் பெறப்படும் அறிக்கைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன. பாரதூரமான நோய்களுக்கு 200,000/= முதல் 1,500,000/= வரையில் வழங்கப்படும். 2. விபத்துகளுக்கான காப்புறுதி முழுமையான நிரந்தர ஊனத்திற்கு- 200,000/= வழங்கப்படும். முழுமையான இடைநிலை ஊனத்திற்கு – 150,000/= முதல் 200,000/= வரையில் வழங்கப்படும். தற்காலிக ஊனத்திற்கு 25,000/= முதல் 100,000/= வரையில் வழங்கப்படும். 3. வாழ்வாதாரக் காப்புறுதி பெற்றோரின் மரணத்தில் – குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பப் பிள்ளைகளின் பெற்றோரில் ஒருவருக்கு 75,000/= வரையில் வழங்கப்படும். பெற்றோர் இருவருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இந்த நிவாரணங்கள் உரித்தாகும். ஆனால் ஒரு பிரச்சினைக்கு அதிகபட்சமாக 225,000/= ஒதுக்கப்படுகிறது. (அதிகபட்சமாக 3 குழந்தைகளுக்கு தலா 75,000/= ஒதுக்கப்படும்.) இந்தக் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணையவழி முறையின் ஊடாக இந்த நன்மைகள் அனைத்தையும் விரைவாக (குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்குள்) பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட முறைமையொன்று இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்படவுள்ளது. இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் “சுரக்ஷா” காப்புறுதியின் கீழ் குழந்தைகளுக்கு உரித்தான நிவாரணம், பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப் பிரிவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான விசேட ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றும் உருவாக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சும் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமான பிரிவுடன் ஒருங்கிணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகர்!

ஈரானிய தூதுவர்  ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு 07ஐ சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, ​​மற்றொரு காரின் சாரதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் தூதுவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தூதுவர் தனது காரில் இருந்து இறங்கி தப்பிச் செல்ல முற்பட்ட காரின் முன்பகுதியில் கையை வைத்து  பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்குமாறு சாரதிக்கு அறிவித்துள்ள நிலையில், சாரதி திடீரென காரை இயக்கி முன்னோக்கி சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அப்போது தூதுவர் அந்த காரின் முன்பகுதியில் விழுந்துள்ள நிலையில், சந்தேகநபரான சாரதி, தூதுவருடன் காரை சுமார் 15 மீற்றர் தூரம் செலுத்தி பின்னர்  நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு பிரவேசித்த பொலிஸார், கொழும்பு 07, வோட் பிளேஸில் வசிக்கும் 33  வயதுடைய வர்த்தகரை செய்துள்ளனர். இந்நிலையில் சந்தேகநபர், கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எலன் மஸ்க்கை சந்தித்த ஜனாதிபதி!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தின் இடையே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அங்கு ஜனாதிபதி  எலன் மஸ்க்குடன் இலங்கையில் Starlink திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார். உலகளாவிய Starlink வலையமைப்புடன் இலங்கையை இணைப்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

தொடரும் சீரற்ற வானிலை!

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை, அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளன. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி புத்தளம் வலயத்தில் 213 பாடசாலைகளும் சிலாபம் வலயத்தில் 158 பாடசாலைகளும் இன்று மட்டும் மூடப்படவுள்ளன. இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையினால் எதிர்நோக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தமது செயற்பாட்டு அறைக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. 24 மணிநேரமும் இயங்கும் செயற்பாட்டு அறைக்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.