Search
Close this search box.

10 கோடி பெறுமதியான அம்பர் மீட்பு!!

கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் உள்ள வீடொன்றில் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் ( திமிங்கலத்தின் வாந்தி)  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் பெயரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் கீழ் இயங்கி வரும் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்னாத்தவில்லு பொலிஸ் விஷேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் கீழ் இயங்கி வரும் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். குறித்த அம்பர் கடலில் மிதந்து கொண்டிருந்த போது கண்டல்குழி மீனவர்களால் மீன்பிடி படகு ஒன்றில் கொண்டுவரப்பட்டு, அதனை விற்பனை செய்யும் நோக்கில் மிகவும் பாதுகாப்பான முறையில் இரகசியமாக காணிக்குள் புதைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதன்போது, குறித்த அம்பரை கடலில் இருந்து கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் நால்வருடன், அதனை வளவுக்குள் மறைத்து வைத்திருந்த அந்த வீட்டின் உரிமையாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கைப்பற்றப்பட்ட அம்பர் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நிறைவடையும் வரை, குறித்த அம்பர் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வைத்து பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வனாத்தவில்லு பொலிஸ் விசேட பிரிவின் அதிகாரிகளுடன் புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.சந்திரசிறிலால் உள்ளிட்டோர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா 13.05.2024 அன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மன்னார், திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாணந்த குருக்கள் தலைமையில் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரையான சுப நேரத்தில் கொடியேற்றம் இடம் பெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு முன் எழுந்தருளியதை தொடர்ந்து விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து கொடிக் கம்பத்திற்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து கொடியேற்றும் விழாவில் இடம்பெற்றது. இதன் போது கொடியேற்ற பெரு விழாவில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.