இலங்கையின் தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு விசேட இராணுவப்பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வியற் கல்லூரிகளில் நாளைய தினம் புதிய மாணவர் அனுமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்னவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகளிலிருந்து விரிவுரையாளர்கள் விலகியுள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஒன்றாக இவ்வாறு விரிவுரையாளர்கள் தங்களது பணிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
மாணவர்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி மாணவர் அனுமதி செயற்பாடுகளை சீர்குலைக்க முயற்சிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களை சேர்க்கும் அனைத்து பொறுப்புக்களும் கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகளிடம் காணப்படுவதனால் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
குழப்பங்களை தடுக்கும் நோக்கில் கல்வியியற் கல்லூரிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.
கல்வியியற் கல்லூரிகளில் பகிடி வதை உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் மாணவர்களை கல்லூரிகளுக்கு சேர்க்கும் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிக்கப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தேசிய கல்வியற் கல்லூரிகளில் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் அமர்த்துவதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.