Search
Close this search box.

தமிழர் பகுதியில் இரவு விபச்சார விடுதியொன்றில் சிக்கிய 4 பெண்கள்!

வவுனியாவில் உள்ள பகுதியில் விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த கைது நடவடிக்கை (19-07-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை செய்த போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவர் த. மகேஸ்வரன் காலமானார்!

தமிழீழ ராணுவம் (TEA) இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்திருப்பதாக முகநூலில் தோழன் பாலன் என்பவர் தகவலை பதிவிட்டுள்ளார். தமிழீழ இராணுவம் என்பது இலங்கையில் செயலிழந்த தமிழ் பிரிவினைவாதக் குழுவாகும். இது பனாகொட த.மகேஸ்வரனால் நிறுவப்பட்டது. லண்டனில் படிப்பை பாதியில் விட்டிட்டு தாய்நாட்டிற்காக போராட வந்தவர்.இலங்கையிலும் இந்தியாவிலும் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டவர். பனாகொடை இராணுவ முகாமில் இருந்து தப்பியவர்.பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பை நடத்தியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

மூதூர் விபத்து – காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு: 64 பேர் வைத்தியசாலையில்

மூதூரில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து மூதூர் – கெங்கே பாலத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் பயணித்த பயணிகள், சாரதி உட்பட 51 பேர் காயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்கள் குழுவொன்றை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியாவில் திடீரென உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக உயிர் பிழைத்த இருவர்!

வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் பகுதியில் வீடு ஒன்று உடைந்துவீழ்ந்தநிலையில் அதிஸ்டவசமாக இருவர் உயிர் பிழைத்தனர். குறித்த வீட்டில் நேற்று (19.07) மதியம் கணவனும் மனைவியும் தங்கியிருந்துள்ளனர். இதன்போது வீடு திடீர் என்று உடைந்து வீழ்ந்தது. குறிப்பாக வீட்டின் பின்பக்க சுவர் மற்றும் கூரைப்பகுதி என்பன முற்றாக உடைந்து வீழ்ந்தது. அனர்த்தம் இடம்பெற்ற சமயத்தில் கணவனும் மனைவியும் வீட்டிற்கு வெளியில் இருந்தமையால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இதேவேளை சிறிநகர்பகுதியில் 1996 ஆம் ஆண்டு பொதுமக்கள் குடியேற்றப்பட்ட நிலையில் 50 ற்கும் மேற்ப்பட்ட வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கின்றது. தமக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குமாறு பல்வேறு தரப்புக்களிடமும் பலமுறை கோரிக்கை முன்வைத்துள்ள நிலையிலும் அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு பாடசாலை மோசடி விவகாரம் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையீடு!

முல்லைத்தீவு விசுவமடு பிரதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மணிவிழா மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை வடமாகாண கல்வி திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளது. ஏற்க்கனவே குறித்த முறைகேடுகள் தொடர்பில் பலமுறைப்பாடுகள் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டும் உரிய தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முன்னணி சமூக ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் வெளிவந்த நிலையிலும் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனையும் வடமாகாண கல்வி திணைக்களமும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இந் நிலையில் குறித்த முறைகேடு தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை இலஞ்சம் உழல்களுக்கு எதிரான முறைப்பாடு ஆணைக்குழுவுக்கு முறையிட்ட தை தொடர்ந்து வட மாகாண கல்வித் திணைக்களத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு தமக்கு அறிக்கை அனுப்புமாறு ஆணைக்குழு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இயங்குநிலை தென்மேற்கு பருவ பெயர்ச்சி நிலைமை காரணமாக இவ்வாறு காற்று நிலைமை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.