பரீட்சை இடைவேளையில் மாணவர்கள் அடிபுடி!
வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. இன்றையதினம் குறித்த பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெற்றது. இந்நிலையில் அங்கு பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாடத்தின் ஒருபகுதி நிறைவுற்றதுடன் நீண்ட நேரம் இடைவேளை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பரீட்சை மண்டபத்திற்கு வெளியில் ஒன்று கூடிய இரு பாடசாலைகளை சேர்ந்த ஆண் மாணவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பம் நீடித்ததுடன் போக்குவரத்துமதடைப்பட்டது. இதனையடுத்து வீதியால் செல்பவர்கள் அங்கு ஒன்று கூடியமையால் குறித்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பல முறைகேடுகள்!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பல நிர்வாக பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தயாரிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. அறிக்கை வழங்கப்பட்டதன் பின்னர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என கோப் குழு இங்கு சுட்டிக்காட்டியுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்பட்ட பொது வர்த்தக குழுவினால் வழங்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளின் அமுலாக்கத்தின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று கனமழைக்கு வாய்ப்பு!!
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணங்களிலும் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். இதேவேளை, வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், ‘கவனம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேற்படி பிரதேசங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.